மதனபுரம் அருகே சாலையில் திரியும் மாடுகளால் விபத்து : வாகன ஓட்டிகள் தவிப்பு

தாம்பரம்: தாம்பரம் - முடிச்சூர் சாலையில் லட்சுமிபுரம், முடிச்சூர், மணிமங்கலம், படப்பை வழியாக பெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதுமட்டுமின்றி தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மருத்துவமனைகள், காவல் நிலையம், திரையரங்கம், ஓட்டல்கள், மார்க்கெட் போன்ற பகுதிகளுக்கு படப்பை, மணிமங்கலம், மண்ணிவாக்கம், மதனபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் தாம்பரம் - முடிச்சூர் சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு மிக முக்கியத்துவம் வாய்ந்த தாம்பரம் - முடிச்சூர் சாலையில் மதனபுரம் பகுதியில் சாலையின் நடுவே 30க்கும் மேற்பட்ட மாடுகள் தினமும் சுற்றி வருவதுடன் காலை மற்றும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன.  இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி கீழே விழும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.
Advertising
Advertising

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தால் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மதனபுரம் பகுதியில் சாலை முழுவதும் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இந்த மாடுகளை அதன் உரிமையாளர்கள் சரியாக கண்டுகொள்ளாதது தான் இதற்கு காரணம். இதனால் தினமும் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் சாலையில் மின் விளக்குகள் சரியாக எரியாததால் விபத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதுமட்டுமின்றி பகல் நேரங்களிலும் மாடுகள் சாலையின் குறுக்கே திடீரென ஓடி வருவதால் வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழும் நிலை ஏற்படுவதுடன் மாடுகளும் உயிரிழக்கும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: