வடிவுடையம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாத கடை, வீடுகளுக்கு சீல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள  வடிவுடையம்மன் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமாக சுமார் 249 வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இவற்றில் வாடகைதாரர்களாக உள்ளவர்கள் அறநிலைய துறைக்கு மாதந்தோறும் வாடகை செலுத்தி வருகின்றனர்.

இவர்களில் சிலர், பல ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. இவர்களுக்கு, அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டும், வாடகை செலுத்தவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாடகை பாக்கி செலுத்தாதவர்களை காலி செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து, வாடகை செலுத்தாத வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்க  அதிகாரிகள் திட்டமிட்டனர்.  இதன்படி அறநிலையத்துறை சென்னை உதவி ஆணையர் கவிநிதி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் உதவி ஆணையர் சித்ராதேவி மற்றும் அலுவலர்கள்  திருவொற்றியூர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் அருகே உள்ள இடத்துக்கு வந்தனர்.  அங்கு, 2 கடைகள் மற்றும் 3 வீடுகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிலர் தங்களது வாடகை பாக்கியை உடனடியாக செலுத்தியதால் அவர்கள் மீது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து அறநிலையத்துறை  அதிகாரிகள் கூறுகையில், ‘‘அடிமனை வாடகைதாரர்கள் 12 கோடி அளவிற்கு வாடகை பாக்கி வைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து வாடகை வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். தற்போது நிலுவை வைத்திருந்தவர்களில் வாடகை செலுத்த முன் வந்ததால்  11 லட்சத்து 83 ஆயிரத்து 399 ரூபாய் வசூல் ஆகியுள்ளது.  வாடகை நிலுவைத் தொகையை செலுத்தாத மற்ற வாடகைதாரர்கள் மீது நடவடிக்கை தொடரும்,’’ என்றனர்.

Related Stories: