மதுரை விரகனூர் அணைக்கட்டு வழியாக கிருதுமால் நதிக்கு வைகை நீர்

திருச்சுழி, டிச. 9: மதுரை விரகனூர்  அணைக்கட்டு வழியாக வைகை நதி நீரை, நரிக்குடி பகுதி கிருதுமால் நதிக்கு திறந்துவிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.    மதுரை மாவட்டம், விரகனூரிலிருந்து அம்பலத்தாடி அணைக்கட்டு வழியாக கட்டனூர், மானூர், வீரசோழன் வழியாக கமுதி வரை கிருதுமால் நதி செல்கிறது. இந்நதி மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வைகையாற்றிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் கிருதுமால் நதியில் மண்மேவி, முட்கள் வளர்ந்தன. இதை தூர்வார விவசாய சங்கம் போராடியதன் விளைவாக ரூ.120 கோடியில் விரகனூரிலிருந்து கமுதி வரை தூர்வாரும் பணி நடந்தது. இந்நிலையில், பல ஆண்டுகளாக கிருதுமால் நதியில் நீர்வரத்து இல்லாததால், 50க்கும்  மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால் வைகையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீணாக கடலில் கலந்தது.

இந்த நீரை கிருதுமால் நதிக்கு திருப்பிவிடக்கோரி,  கிருதுமால் நதி விவசாயிகள் சங்கம் சார்பில், மதுரை தலைமைப்பொறியாளரிடம் கடந்தாண்டு மனு கொடுத்தனர். அதில், ‘சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய  மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக கிருதுமால் நதி விளங்குகிறது. இந்த நதிக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கடந்த 2006, 2015 ஆண்டுகளில் கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இந்த ஆண்டும் கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தாண்டு பலத்த மழையால், வைகை அணை முழு கொள்ளவை எட்டியது. இதனால், 10 நாட்களுக்கு கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக கிருதுமால் பாசன சங்க பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: