தாம்பரம் சானடோரியத்தில் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம்: உயர் நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார்

தாம்பரம்: தாம்பரம் சானடோரியத்தில் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் திறந்து வைத்தார்.தாம்பரம் சானடோரியத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்கு, மாவட்ட குற்றவியல் நடுவர் மன்றம், மாவட்ட முன்சீப் மற்றும் சார்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றங்களில் பல்லாவரம், பம்மல்,  தாம்பரம், சிட்லப்பாக்கம், சங்கர் நகர், சேலையூர், மணிமங்கலம், பீர்க்கன்காரணை, குரோம்பேட்டை உள்ளிட்ட காவல் நிலைய வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.இந்நிலையில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களால் இந்த நீதிமன்றத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில், தாம்பரம் சானடோரிய நீதிமன்ற வளாகத்தில்,  கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் அமைப்பட்டது.

இதனை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் நேற்று திறந்து வைத்தார். உடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் பங்கேற்று குத்துவிளக்கினை ஏற்றி வைத்தனர்.நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா, மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள்,  வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>