வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் உணவில் விஷம் வைத்து குழந்தை கொலை? : தப்பியோடிய கள்ளக்காதலனுக்கு வலை

வேளச்சேரி: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி கங்கா (28). கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மகன் அருண் (3). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சத்தியமூர்த்தி இறந்து விட்டார்.  இதையடுத்து, பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட மேஸ்திரி வெங்கடேசன் (35) என்பவருடன் கங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். பின்னர், கடந்த 5 மாதத்துக்கு முன் இருவரும் சென்னை வந்து, மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம் சங்கரா நகர் 4வது அவென்யூவில் வாடகை வீட்டில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், கங்கா கேரளாவில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, தனது மகனை வெங்கடேசனிடம் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கடேசன் வாங்கி வந்த உணவை சாப்பிட்ட குழந்தை அருணுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதுபற்றி கங்காவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அவர் அவசர அவசரமாக சென்னை புறப்பட்டார். மருத்துவமனையில் டாக்டர்கள், ‘‘குழந்தை என்ன சாப்பிட்டது,’’ என கேட்டபோது, முறையாக பதிலளிக்காத வெங்கடேசன் சிறிது நேரத்தில் அங்கிருந்து மாயமானார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு குழந்தை இறந்தது. இதை பார்த்து கங்கா கதறி அழுதார். பின்னர், வெங்கடேசனை தொடர்பு கொண்டபோது, அவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு, தலைமறைவானது தெரிந்தது. இதனால், சந்தேகமடைந்த கங்கா, குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், குழந்தை அருண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

Related Stories:

>