பாதாள சாக்கடை உடைப்பு காரணமாக குடியிருப்பு கிணறுகளில் கழிவுநீர் கலந்தது

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் பாதாள சாக்கடை குழாய் உடைந்ததால், சுற்றுப் பகுதி வீடுகளில் உள்ள கிணற்றில் கழிவுநீர் கலந்தது. இதனால், அதனை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 163 மற்றும் 165வது வார்டுக்கு உட்பட்ட கருணீகர் தெரு,  3வது தெரு நியூ காலனி 1வது தெரு, நியூ காலனி பிரதான சாலை போன்ற 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. தரமற்ற குழாய்கள் பொருத்தியதால் அடிக்கடி பாதாள சாக்கடை உடைவதாகவும், எனவே இதனை அகற்றிவிட்டு, தரமான புதிய குழாய்கள் பொருத்த வேண்டும், என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் இப்பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சுற்றுப்பகுதி வீடுகளில் புகுந்தது. இதனால் ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணபுரம், பரமேஷ்வரன் நகர், நியூ காலனி போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளின் கிணற்றில் கழிவுநீர் கலந்துள்ளது.

 துர்நாற்றத்துடன் தண்ணீர் வருவதால் மக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது சுற்றுவட்டாரத்தில் உள்ள பல வீடுகளின் கிணறுகளிலும் கழிவுநீர் கலந்துள்ளது. இதனால் இந்த நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில்  எங்கு பார்த்தாலும் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. குடிநீர் குழாய், கிணறு போன்றவற்றிலும் கழிவுநீர் கலந்துவிட்டது. இதனை தடுக்க மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இதனை சரிசெய்வதற்காக ஆங்காங்கே போக்குவரத்தினை மாற்றிவிடுவதால் மக்கள் அல்லல்படும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. இந்த பாதாள சாக்கடை கழிவினால் ஏற்படும் ஆபத்தையும் அசவுகரியத்தை தடுக்க ஆலந்தூர் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளின் கிணற்றில் கழிவுநீர் கலந்துள்ளதால் அதை பயன்படுத்த முடியவில்லை. எனவே, மக்கள் நலன் கருதி, இப்பகுதிக்கு போதிய தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.

Related Stories:

>