பொதுப்பணித்துறை அலட்சியம் காரணமாக 19 கோடியில் சீரமைக்கப்பட்ட அடையாறு ஆற்றின் கரை 4 நாள் மழைக்கே உடைந்தது

தாம்பரம், டிச. 4: ஆதனூர் - மணப்பாக்கம் வரை 19 கோடியில் சீரமைக்கப்பட்ட அடையாறு ஆற்றின் கரை 4 நாள் மழைக்கே பெருங்களத்தூர் அருகே உடைந்ததால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அடையாறு ஆறு கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூரில் துவங்கி மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்துார், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக, பட்டினம்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது. இதன் மொத்த நீளம், 42 கி.மீ. இந்த ஆற்றின் அகலம் 60 அடி முதல் 200 அடிக்கு மேல் இருந்தது. அப்போது, இந்த ஆற்றில் 60 ஆயிரம் கன அடி வீதம் நீர் கடத்தும் திறன் இருந்தது. தற்போது, ஆக்கிரமிப்பு காரணமாக 20 அடி முதல் 60 அடியாக சுருங்கி விட்டது. இதன் காரணமாக, அடையாற்றில் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் கனஅடி நீர் சென்றால் கூட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்து விடும் நிலை உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு கன மழையில் அதிகபட்ச அளவை காட்டிலும் 10 அடி உயரத்திற்கு அடையாற்றில் வெள்ளம் ஓடியது. இதனால், ஆற்றை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மூழ்கின. அப்போது, வரதராஜபுரம், முடிச்சூர், அனகாபுத்துார், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகள் அதிக பாதிப்புக்குள்ளானது.

இதையடுத்து அடையாறு ஆற்றை தூர்வாரி சீரமைக்க அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக ஆதனூர் - மணப்பாக்கம் வரை, 22 கி.மீ. துாரத்திற்கு 19 கோடி செலவில் அடையாறு ஆறு துார்வாரி, அகலப்படுத்தப்பட்டது. கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்றது.

இதனால், பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே  சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக  பழைய பெருங்களத்தூர், சிட்லபாக்கம், திருவஞ்சேரி, செம்பாக்கம் திருமலை  நகர், மேற்கு தாம்பரம் சி.டி.ஓ காலனி, டி.டி.கே நகர் ஆகிய பகுதிகளில்  அதிகப்படியாக மழைநீர் தேங்கியுள்ளது. ஆனால், பணிகள் முறையாக நடைபெறவில்லை. குறிப்பாக, அடையாறு ஆற்றின் கரைப்பகுதியை பெயரளவுக்கு மட்டுமே பலப்படுத்தினர். இதனால், சிறு மழை பெய்தால் கூட மண் அரிப்பு ஏற்பட்டு, கரை உடையும் அபாயம் உள்ளது, என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஆனால், சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், அடையாறு ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பழைய பெருங்களத்தூர், கிரீன் சிட்டி பின்புறம் உள்ள அடையாறு ஆற்றங்கரை வலுவிழந்து காணப்பட்டதால், திடீரென உடைப்பு ஏற்பட்டது.

இதனால், வெள்ள நீர் அருகில் உள்ள எப்.சி.ஏ. நகர், குட்வில் நகர், மூவேந்தர் நகர், பாலாஜி நகர், எஸ்.ஆர்.எஸ் நகர்,  சசிவரதன் நகர், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சூழ்ந்தது. சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இவ்வாறு வரும் வெள்ள நீரில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் குடியிருப்பு வீடுகளுக்குள் வருவதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து பீதியுடன் உள்ளனர். எனவே, உடைப்பு ஏற்பட்ட பகுதியை உடனே அடைத்து, குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதிகாரிகள் போட்டா போட்டி

பாதிக்கப்பட்ட மக்கள்  கூறுகையில், ‘‘அடையாறு ஆற்றை பல லட்சம் செலவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள்  சீரமைத்து, கரைகளை பலப்படுத்தினர். ஆனால், தரமற்ற முறையில் பணி  மேற்கொண்டதால், கடந்த 4 நாட்களாக பெய்த மழைக்கே அடையாறு ஆற்றங்கரை  உடைந்துள்ளது. உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்க வேண்டும் என  பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால், அவர்கள், பெருங்களத்தூர்  பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவியுங்கள் என கூறுகின்றனர்.  பெருங்களத்தூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால்,  பொதுப்பணித்துறையினர் தான் அந்த பணிகளை செய்ய வேண்டும் என்கின்றனர்.  இவ்வாறு, ஒருவருக்கொருவர் மாற்றி, மாற்றி பேசி வருகிறார்களே தவிர யாரும்  நடவடிக்கைகள் எடுக்க முன்வரவில்லை,’’ என்றனர்.

Related Stories: