நெட்டூர் சிறுமிக்கு டெங்கு அறிகுறி நெல்லை ஜிஹெச்சில் அனுமதி

ஆலங்குளம், நவ. 27:  நெட்டூரில்  8வயது சிறுமிக்கு டெங்கு அறிகுறி தென்பட்டதை அடுத்து  நெல்லை அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆலங்குளம் அடுத்த நெட்டூர் பாடசாலை தெருவைச் சேர்ந்த அப்ரானந்தம் மகள் சுமித்ரா (8).  அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் சிறுமி கடந்த 4 நாட்களாக   காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து சிறுமியின் ரத்த மாதிரியை ஆய்வு  செய்த போது டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து மேற்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் வைரஸ் காய்ச்சலால் மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கபட்டு தனியார்  மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போதிய மஸ்தூர்  பணியாளர்கள் இல்லாதநிலையில் சுகாதார துறை நோய் தடுப்பு பணியில் திணறி வருகிறது.  ஆலங்குளம் மற்றும்  அருகில் உள்ள பகுதிகளில் மாணவர்கள்,பொதுமக்கள்  அதிகளவில் வைரஸ் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 5 நாட்களுக்கும்  மேலாக பள்ளிக்கு விடுமுறை எடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சலால்  சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.  தற்போது பரவும் காய்ச்சல் பெரும்பாலும் மோசமான குடிநீர் விநியோகத்தால்  வருவதாக கூறப்படுகிறது. அதிலும் நெட்டூர் பகுதிக்கு 10 நாட்களுக்கு  ஒருமுறைதான் தண்ணீர் விநியோகம் செய்யபடுவதாக பொதுமக்கள் மத்தியில்  கூறப்படுகிறது. அரசு தரப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தி நிலவேம்பு குடிநீர்  வழங்கி வருகின்றனர்.

Related Stories: