மேட்டூர் அனல் நிலையம் முன் ஒப்பந்த பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டூர், நவ.22:  மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த பணியாளர்கள் அனல் மின் நிலையம் எதிரே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்வாரியத்தில், சுமார் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 1,700 பேர் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும், மின்துறை அமைச்சர் அறிவித்த தினக்கூலி ₹380ஐ மின்வாரியமே நேரடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரியும் போது விபத்து நேர்ந்தால், மின்வாரியமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாவர் சங்கத்தின் தலைவர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். வெஙகடாஜலம், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் மோகன், மாநில துணைத்தலைவர்கள் நாகராஜ், சுப்ரமணி ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். நூற்றுக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Stories: