×

விவசாய நிலம் வழியாக உயரழுத்த மின்கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை கைவிடாவிட்டால் போராட்டம்

கிருஷ்ணகிரி, நவ.22:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலம் வழியாக உயரழுத்த மின்கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை கைவிடாவிட்டால் திமுக சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிழக்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சொக்கநாதபுரம், கூஸ்தனப்பள்ளி, சேவகானப்பள்ளி, சிச்சிருகானப்பள்ளி வழியாக உயரழுத்த மின்கோபுரம் அமைக்கும் ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. விவசாய நிலம் வழியாக மின்கோபுரம் அமைக்க கூடாது என, விவசாயிகள் கூறி வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை உயரழுத்த மின் கோபுரம் அமைக்க, பொக்லைன் வாகனத்துடன் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதை அறிந்த விவசாயிகள், சேவகானப்பள்ளி அருகே திரண்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ, ஓசூர் சத்யா எம்எல்ஏ ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தேன். மேலும், சம்பவம் குறித்து ஓசூர் தாசில்தார் செந்தில்குமரன் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், மின்கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபாகரை நேற்று எம்எல்ஏக்கள் பிரகாஷ், முருகன், சத்யா ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தளி பிரகாஷ் எம்எல்ஏ.,. நிருபர்களிடம் கூறியதாவது: ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகலூர் அருகே சேவகானப்பள்ளியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு உயரழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக விவசாய நிலம் வழியாக மின் கோபுரம் கொண்டு செல்லக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். 2 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு தனியார் பாதை வழியாக மின் பாதையை கொண்டு செல்லலாம். ஆனால், அதை தவிர்த்து 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாய நிலம் வழியாக கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக விவசாயிகளை மிரட்டி வருகிறார்கள். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும். உயரழுத்த மின் கோபுரம் அமைக்க விவசாய நிலத்தில் குழிகள் தோண்டக்கூடாது என்று நாங்கள் கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளோம். 3 நாட்களில் இது தொடர்பாக முடிவு எடுப்பதாக கலெக்டர் கூறியிருக்கிறார். விவசாய நிலம் வழியாக மின்கோபுரம் அமைப்பதற்கான நடவடிக்கையை கைவிடாவிட்டால் தலைமைக் கழகத்தின் அனுமதி பெற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
இவ்வாறு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ கூறினார்.

Tags : land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!