பள்ளத்தில் சிக்கிய டிராக்டரில் இருந்து குதித்த வாலிபர் சாவு

போச்சம்பள்ளி, நவ.20: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே சப்பானியூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(47). இவரது மகன் ராமன்(23). இருவரும் கூலி தொழிலாளிகள். ராமனுக்கு திருமணமாகி ஆஷா என்ற மனைவி உள்ளார். இவர் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், கணேசனும், ராமனும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டிராக்டரில் கருங்கல்நகர் என்னுமிடத்திற்கு செங்கல் பாரம் ஏற்றுவதற்காக சென்றனர். டிராக்டரை ராமன் ஓட்டியுள்ளார். அங்கு. லோடு இறக்கி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, டிராக்டரின் சக்கரம் அங்குள்ள ஒரு பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி கவிழும் நிலைக்கு சென்றது.  இதனால், டிராக்டரில் இருந்த கணேசனும், ராமனும் அதிலிருந்து குதித்துள்ளனர். இதில் நிலைதடுமாறி விழுந்த ராமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கணேசனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கணேசனும், சேலம் அரசு மருத்துவமனைக்கு ராமனும் கொண்டு செல்லப்பட்டனர். கணேசனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராமன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ஓட்டலுக்குள் புகுந்து வாலிபருக்கு வெட்டு