×

சிறுபான்மையினருக்கு தனியாக கல்லறைக்கு நிலம் ஒதுக்க போதகர்கள் மனு

கிருஷ்ணகிரி, நவ.19:  போச்சம்பள்ளி தாலுகாவில் சிறுபான்மையினருக்கு தனி கல்லறை அமைக்க, நிலம் ஒதுக்க வேண்டும் என கோரி கலெக்டரிடம் கிறிஸ்தவ போதகர்கள் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இதில், போச்சம்பள்ளி தாலுகாவைச் சேர்ந்த கிறிஸ்தவ சபைகளின் மதபோதகர்கள், மத்தூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் பாபு தலைமையில் கலெக்டரிடம் கோரிக்கை அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: போச்சம்பள்ளி வட்டாரத்தில் போச்சம்பள்ளி, மத்தூர், நாகரசம்பட்டி, பாரூர், அகரம், ஈச்சங்காடு, களர்பதி, அத்திப்பள்ளம், மாதிநாயக்கன்பட்டி, வேலவள்ளி, தேவீரஅள்ளி, சந்தூர், பண்ணந்தூர், பேரூஅள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 30 திருச்சபைகளும், 2 ஆயிரம் கிறிஸ்தவர்களும் வசித்து வருகிறோம். எங்கள் திருச்சபைகளுக்கு சொந்தமாக யாதொரு கல்லறை நிலமும் இல்லை. இதனால் நாங்கள் எங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் இறந்தால், ஓடைகள், ஆறுகள் போன்ற பகுதியில் உடல்களை அடக்கம் செய்து வருகிறோம். இக்கோரிக்கையினை வலியுறுத்தி இதுவரை 4 முறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது கோரிக்கையை நிறைவேற்றி நிலம் ஒதுக்கி தரவேண்டும். இல்லாவிட்டால், வட்டார காங்கிரஸ் சார்பில், சிறுபான்மையின மக்களை திரட்டி, போச்சம்பள்ளி தாலுகா அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!