பெரம்பூர் தெற்கு நெடுஞ்சாலையில் நடைபாதை கடைகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்

பெரம்பூர்: பெரம்பூர் தெற்கு நெடுஞ்சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளால்  பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 50 கோடி செலவில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை சரியாக பராமரிக்கவில்லை. இதனால், பெரும்பாலான நடைபாதைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் நிரந்தர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளின் விளம்பர பலகைகள் மற்றும்  மேற்கூரைகள் அமைத்துள்ளனர். மேலும், நடைபாதைகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டும், மின்சார பெட்டிகள் வைக்கப்பட்டும் உள்ளதால், பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, நடைபாதைகளில் கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலங்களுக்கு விழா எடுக்கும் போர்வையில் நடைபாதைகள் முற்றிலும் அடைக்கப்படுகிறது. ஆனால், இதனை தடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.

Advertising
Advertising

நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளில், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பெயரளவுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகள், அதை தொடர்ந்து கண்காணிப்பதில்லை. இதனால், சில நாட்களில் மீண்டும் அதே பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்து விடுகின்றன. ‘‘நடைபாதை நடப்பதற்கே’’ என மாநகராட்சி சார்பில் பல இடங்களில் அறிவிப்பு பலகை வைத்திருந்தாலும், அதனை மறைக்கும் அளவிற்கு ஆக்கிரமிப்பு கடைகள் பெருகி வருகிறது. இதனால், பாதசாரிகள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து செல்லும் நிலை உள்ளது. பெரம்பூர் தெற்கு நெடுஞ்சாலை ஜமாலியா பகுதியில் 40க்கும் மேற்பட்ட பழைய மர சாமான்கள் விற்கும் கடைகள் உள்ளன. இதன் உரிமையாளர்கள், தங்கள் மரச் சாமான்களை நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால், பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகள், ஜமாலியா மேல்நிலைப் பள்ளி உட்பட அப்பகுதியிலுள்ள 5க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும்  அப்பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.

அதுபோன்ற நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை ஆக்கிரமைப்பு கடைகளை  அகற்ற எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும், நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்திருப்பவர்கள், மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கொடுத்து விடுவதால்தான், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, அதிகரித்து வரும் நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க இப்பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களையும் அகற்றி, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எளிதாக சென்று வர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என அப்பகுதி மக்கள்  வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: