58 கிராம பாசன கால்வாயில் வைகையிலிருந்து தண்ணீர் திறக்கக்கோரி போராட்டம்

உசிலம்பட்டி, நவ. 12: வைகை அணையிலிருந்து 58 கிராம பாசன கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் திறக்கக் கோரி, உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு உட்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், 58 கிராம பாசன கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது. பணி நிறைவடைந்து கடந்த ஆண்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், இதன் பிறகு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால், இந்த கால்வாய் வறண்டு கிடக்கிறது. கால்வாயில் தண்ணீர் வராததால், இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. எனவே, 58 கிராம பாசன கால்வாயில் வைகை அணையிலிருந்து நிரந்தரமாக தண்ணீர் திறக்க அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உசிலம்பட்டி தேவர் சிலை அருகே ஐந்துகல்ராந்தல் பகுதியில் நேற்று விவசாயிகள் ஏராளமானோர் திரண்டனர். இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து இங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அனுமதியின்றி உண்ணாவிரதத்தில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், முன்னாள் எம்எல்ஏ கதிரவன், திமுக நகர் செயலாளர் தங்கமலைப்பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லக்கண்ணு, தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகி சங்கிலி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் தங்கமலை, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் குருசாமி, சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் ஒருங்கிணைப்பாளர் அல்லிக்கொடி, 58 கிராம பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பெருமாள், ஜெயராஜ், சிவபிரகாசம் மற்றும் விவசாயிகள் என 120 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும், பேரையூர் சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பிறகு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories:

>