அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

அம்பத்தூர்: அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள், வாகனங்கள்  இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இச்சாலையில் செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர்.  அம்பத்தூரில் இருந்து புதூர், கள்ளிக்குப்பம், சண்முகபுரம், சூரப்பட்டு, புழல் வழியாக செங்குன்றத்திற்கு சாலை செல்கிறது. இந்த சாலையை அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை என மக்கள் அழைக்கின்றனர். இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையானது, சி.டி.எச் சாலை, கொல்கத்தா நெடுஞ்சாலை இணைக்கும் வகையில் உள்ளது. இச்சாலையில் அரசு நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், சாப்ட்வேர், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்பட ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.

Advertising
Advertising

இதனால், இச்சாலையை அரசு ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக, இச்சாலையில்  புதிதாக பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் உருவாகின்றன. இதனால், சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இச்சாலையில் போக்குவரத்து அதிகமாக இருந்ததால், அம்பத்தூர் முதல் புழல் வரை விரிவு படுத்தப்பட்டது.  இச்சாலையில், அம்பத்தூர் முதல் புழல் வரை பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளால் பாதசாரிகள் அவதிப்பட்டு சென்று வருகின்றனர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,  “அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் பாதசாரிகள் செல்லும் இடங்களில் ஆங்காங்கே வர்த்தக நிறுவனங்கள் முன்பு  வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இங்குள்ள சாப்ட்வேர் நிறுவனம் முன்பு நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சாலையில் தான் நிறுத்தப்படுகின்றன. இதோடு மட்டுமல்லாமல், சாலையை ஆங்காங்கே ஆக்கிரமித்து டிபன் கடைகள், தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சாலை ஓரத்தில் உள்ள மெக்கானிக் செட்டுகளுக்கு பழுது பார்க்க வரும் வாகனங்களும் சாலையை ஆக்கிரமித்து விடப்பட்டுள்ளது.  பழைய பேப்பர், இரும்பு கடைகளிலும் வரும் கழிவுகள் சாலையை  ஆக்கிரமித்து மூட்டை கட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதோடு மட்டுமில்லாமல், திருமண மண்டபங்கள், உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். மேலும், பொக்லைன், லாரிகள் உள்பட கனரக வாகனங்களும் சாலையை ஆக்கிரமித்து ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட ஆக்கிரமிப்புகளால் சாலைகளில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியவில்லை. அப்படியே செல்லும் பாதசாரிகள் மீது வாகனம் மோதி விபத்துகளில் சிக்குகின்றனர். குறிப்பாக, கள்ளிக்குப்பம், சூரப்பட்டு  பகுதியில் சாலை ஓரத்தில் செல்லும் பாதசாரிகள் அடிக்கடி பலியாகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், பல்வேறு கனரக வாகனங்கள் மோதி பாதசாரிகள் ஆண்டுதோறும் பலர் உயிரிழந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட சாலை விரிவாக்கத்திற்கு பிறகு, பொதுமக்களை விட ஆக்கிரமிப்பாளர்கள் தான் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதே சாலையில் தான் அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இருந்த போதிலும், போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்பாளர்களிடம் கையூட்டு வாங்கி கொண்டு கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.  மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பலமுறை சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.  இதனால், பாதசாரிகள் உயிரிழப்பு, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் பல தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Stories: