×

சிறுசேமிப்பில் முதலிடம் பிடிக்க கூடுதலாக பணியாற்ற வேண்டும்

கிருஷ்ணகிரி, நவ.8: சிறுசேமிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் பெறும் வகையில் முகவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டுமென கலெக்டர் கேட்டுக்கொண்டார்.  உலக சிக்கன நாளையொட்டி, மாவட்ட அளவில் நடந்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, நடனப் போட்டி மற்றும் நாடக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2018-19ம் நிதியாண்டில் சிறுசேமிப்பில் மாவட்ட அளவிலான மகளிர் முகவர்கள், வட்டார அளவிலான நிலை முகவர்கள் மற்றும் நகராட்சி அளவிலான முகவர்கள் சிறப்பாக பணியாற்றி, ₹350 கோடியே 22 லட்சத்து 7 ஆயிரத்து 730 என்ற இலக்கை எட்டியுள்ளனர். உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும். சிறுசேமிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் பெறும் வகையில், சிறுசேமிப்பு முகவர்கள்  கூடுதலாக பணியாற்ற வேண்டும்,’ என்றார்.

பின்னர், மாவட்ட அளவிலான முகவர்கள், நிலை முகவர்களுக்கு முதல் பரிசாக ₹3 ஆயிரம், 2ம் பரிசாக ₹2 ஆயிரம், 3ம் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், வட்டார, நகராட்சி அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ₹1000 மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சிறுசேமிப்பு) சாமிவேல், மாவட்ட சேமிப்பு அலுவலர் சண்முகம், தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலக உதவியாளர், சிறுசேமிப்பு அலுவலக பணியாளர்கள் நாராயணராவ், ரெஜினா, அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்