×

போச்சம்பள்ளி பகுதியில் தொடர் மழையால் பருத்தி விளைச்சல் அமோகம்

போச்சம்பள்ளி, நவ.8: போச்சம்பள்ளி பகுதியில் தொடர் மழையால் பருத்தி செழித்து வளர்ந்துள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக பருவமழை பொய்த்து போனதால் பருத்தி சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். சில விவசாயிகள் கிணற்று நீரை பயன்படுத்தி 25 சதவீத அளவிற்கு பருத்தி சாகுபடி செய்தனர். ஆனால் கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு போயின. அதன் காரணமாக 2 ஆண்டாக விவசாயம் நலிவடைந்தது. பருத்தியை அடியோடு மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த மாதம் நல்ல மழை பெய்ததால் கேஆர்பி அணை நிரம்பி பாரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் விடப்பட்டு போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் காரணமாக விவசாய நிலங்களில் உள்ள கிணறு மற்றும் குட்டைகள் நிரம்பி, நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்து எங்கு பார்த்தாலும் தண்ணீர் மயமாக காட்சி அளிக்கிறது.

அத்துடன் விவசாய பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.  மழையின் காரணமாக போச்சம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதியான புளியாண்டப்பட்டி, ஒட்டப்பட்டி, பாளேத்தோட்டம், வெப்பாலம்பட்டி, வேலம்பட்டி, தாதம்பட்டி, ஆனந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 800 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது, பருத்தி செடிகள் பச்சை பசேல் என காணப்படுகிறது. மேலும், பூக்களும் விட்டுள்ளது. வரும் ஜனவரி, பிப்பவரி மாதங்களில் பருத்தி எடுப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் பருத்தி சாகுபடியை மறந்த விவசாயிகள், தற்போது பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்னர்.

Tags : area ,Pochampally ,
× RELATED அலங்காநல்லூர் பகுதியில் மழை: அறுவடை நேரத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிர்