பாரிமுனையில் பரபரப்பு வங்கி டெபாசிட் மெஷினில் 500 ரூபாய் கள்ள நோட்டு: டிராவல்ஸ் உரிமையாளர் சிக்கினார்

தண்டையார்பேட்டை: பாரிமுனையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் டெபாசிட் மெஷினில் 500 ரூபாய் கள்ளநோட்டு இருந்தது. இதுதொடர்பாக டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாரிமுனை கொத்தவால்சாவடி கோவிந்தப்பன் தெருவில் தனியார் வங்கியின் ஏடிஎம் மற்றும் டெபாசிட் மெஷின் உள்ளது. இந்த மெஷினில் கடந்த 4ம் தேதி பணம் வைப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அவர்கள் டெபாசிட் செய்யும் மெஷினை திறந்து பார்த்தபோது, அதில் சில 500 ரூபாய் நோட்டுகள் தனியாக இருந்தது. அவற்றை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது, அவை கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது.இதுகுறித்து ஊழியர்கள் உடனடியாக வங்கி மேலாளர் ஷேக் சுலைமானுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்வையிட்டு, கள்ள நோட்டு என்பதை உறுதி செய்தார். பின்னர், இதுபற்றி கொத்தவால்சாவடி போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

Advertising
Advertising

மேலும், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.அதில், கடந்த 4ம் தேதி பூக்கடை ஆவுடையப்பன் தெருவை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர்  பிரகாஷ் கன்காரியா (42) என்பவர், டெபாசிட் மெஷினில் ரூ.40 ஆயிரம் செலுத்துவது பதிவாகி இருந்தது. அதில் தான் ஐந்து 500 ரூபாய் கள்ளநோட்டுகளும் இருந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பிரகாஷ் கன்காரியாவிடம் போலீசார் விசாரணை நடத்தி நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனிடையே கன்காரியாவுக்கு கள்ள நோட்டுகள் எப்படி கிடைத்தது? இவருக்கு கள்ள  நோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார்  விசாரித்தனர். பின்னர் பிரகாஷ் கன்காரியாவை நேற்று சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: