கிராமத்திற்குள் வந்த புள்ளிமான்

சாயல்குடி, அக். 31: சாயல்குடி பகுதியில் கனமழை பெய்து வருவதால் காட்டில் திரிந்த மான் ஒன்று கிராமத்திற்குள் நுழைந்தது. பொதுமக்கள் பிடித்து வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.  சாயல்குடி பகுதியிலுள்ள நரிப்பையூர், ஒப்பிலான், ஏர்வாடி இதம்பாடல், போன்ற கடற்கரை காடுகளிலும், கடலாடி, ஆப்பனூர், கிடாத்திருக்கை, எஸ்.தரைக்குடி, சேதுராஜபுரம், மலட்டாறு முக்குரோடு, கோவிலாங்குளம், கொம்பூதி. முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி, பேரையூர் போன்ற பகுதிகளில் உள்ள மலட்டாறு காடுகளிலும் அதிகளவில் மான்கள் கூட்டமாக வாழ்ந்து வருகிறது.  தற்போது கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காட்டிலிருந்த மான்கள் கூட்டம், கூட்டமாக கிராம பகுதிகளுக்குள் வருகிறது. அதனை நாய்கள் துரத்துவதால் மீண்டும் காட்டுப்பகுதிக்குள் ஓடுகிறது. இந்நிலையில் நேற்று சாயல்குடி அருகே எஸ்.டி சேதுராஜபுரத்தில் மான் கூட்டம் வந்துள்ளது. நாய்கள் துரத்தியதும் மான்கள் ஓடியுள்ளது. அதில் ஒரு புள்ளிமான் மிரண்டு வீட்டிற்குள் புகுந்தது. அதனை மீட்ட கிராமமக்கள் சாயல்குடி வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்து மானை ஒப்படைத்தனர். இதனால் மான்களை காப்பாற்ற முதுகுளத்தூர், கடலாடி காட்டு பகுதிகளில் மான் காப்பகம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: