சங்கரன்கோவில், அக். 24: சங்கரன்கோவில் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட மக்காத குப்பைகள், நெல்லை சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சங்கரன்கோவில் நகராட்சி, நெல்லை மாவட்டத்தில் முதல்நிலை நகராட்சி ஆகும். இங்குள்ள 30 வார்டுகளில் சுமார் 70 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 21 ஆயிரம் கட்டிடங்கள் உள்ளன. நகராட்சி பகுதியில் தினமும் வீடு, வீடாக சென்று துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை வாங்கிச் செல்கின்றனர். நகர பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 11 டன் மக்கும் குப்பைகளும், 7 டன் மக்காத குப்பைகளும் சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் திருவேங்கடம் சாலை, மீரான் சேட் காலனி, வாரந்சந்தை தெருவில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் சேகரிப்பு மையம் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்டு இயற்கை உரங்களாக மாற்றப்படுகின்றன.