சேலம் அருகே கன மழையால் தரைப்பாலம் மூழ்கியது

ஆட்டையாம்பட்டி, அக். 23: சேலம் அருகே கன மழையால் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால்இ போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே இனாம்பைரோஜி வழியாக மின்னக்கல், வெண்ணந்தூர் மற்றும் ராசிபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலையில் மினி பஸ்கள் தவிர பள்ளி வேன்கள், லாரிகள் மற்றும் கார்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இடையில் திருமணிமுத்தாறு தரைப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் தண்ணீர் தரை பாலத்தை மூழ்கடித்து, 2 அடி உயரம் வரை சென்றது. நேற்று காலை முதலே இச்சாலையில் டூவீலர்கள் முதல் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாயினர்.  இதில் மழையால் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால், மாணவர்களின் சிரமம் குறைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கன மழை பெய்தால், தண்ணீர் பாலத்தை மூழ்கடித்தப்படி செல்கிறது. இதை தவிர்க்க பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும். இது குறித்து தினகரனில் படத்துடன் செய்து வெளியிடப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை இல்லை.

எனவே, தரைப் பாலத்தை உயர்த்தி கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>