ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் இளைஞர்கள் வடசென்னை பகுதியில் மீண்டும் தலைதூக்கும் காற்றாடி கலாச்சாரம்

பெரம்பூர்: சென்னையில் மெரினா கடற்கரை, விளையாட்டு மைதானங்கள் மற்றும் வீட்டு மொட்டை மாடிகளில் பலர் காற்றாடி விட்டு வந்தனர். இந்த காற்றாடியின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து பலர் இறந்தனர். எனவே, காற்றாடி விடுவதற்கு தடை கோரி, சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனபேரில், சென்னை பெருநகர காவல் துறை சார்பில், சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி பறக்க தடை விதிக்கப்பட்டது. கடைகளில் மாஞ்சா நூல், காற்றாடி விற்கக்கூடாது எனவும், மீறி  விற்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனாலும், தடையை மீறி பல இடங்களில் காற்றாடி பறக்கவிட்ட மற்றும் விற்பனை செய்த பலரை போலீசார் கைது செய்தனர். இதனால் சென்னையில் காற்றாடி கலாச்சாரம் ஓரளவுக்கு ஓய்ந்தது. இந்நிலையில், தற்போது வடசென்னை பகுதிகளில் மீண்டும் காற்றாடிகள் பறக்கவிடப்படுகிறது. குறிப்பாக புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி பி.வி  காலனி, புளியந்தோப்பு கன்னிகாபுரம் மற்றும் பி.எஸ் மூர்த்தி நகர், ஜமாலியா பகுதிகளில் பலர் காற்றாடிகளை பறக்க விடுகின்றனர்.

போலீசார் கெடுபிடியால் கடைகளில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல்   விற்பனை தடைபட்டுள்ள நிலையில், தற்போது ஆன்லைன் மூலம் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் வாங்கி, பறக்க விடுவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பிரபல ஆன்லைன் சந்தைகளில் காற்றாடிகள் தடையின்றி விற்கப்படுகிறது. ஆடர்களுக்கு  ஏற்றார்போல 12 காற்றாடிகள்  அடங்கிய பேக்கேஜ் ரூ.250 முதல் ரூ.599 வரை விற்கப்படுகின்றன. இதில் 12 காற்றாடிகள் ஒரு பேக்கேஜ் ஆகவும், 24 காற்றாடிகள் ஒரு பேக்கேஜ் ஆகவும் விற்கப்படுகின்றன. காற்றாடிகள் மட்டுமின்றி, மாஞ்சா நூல்களும் இதே வெப்சைட்டில் விற்கப்படுகின்றன. இவற்றை மொத்தமாக இப்பகுதி இளைஞர்கள் வாங்கி பறக்க விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே, இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: