வாடகை தொடர்பாக வழக்கு தொடர ஒப்பந்த பதிவு அவசியமில்லை : உயர் நீதிமன்றம் விளக்கம்

சென்னை:  சென்னையை சேர்ந்தவர் மணிமேகலை. இவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் செல்வகண்ணன். இவர்கள் இருவருக்கும் வாடகை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய உத்தரவிட கோரி மணிமேகலை சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த மனுவை சிறு வழக்குகள் நீதிமன்றம், வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்ட ஆவணம் இல்லை என்ற காரணத்திற்காக வழக்கை விசாரணைக்கு பட்டியலிடவில்லை. இதை எதிர்த்து மணிமேகலை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, வாடகை தொடர்பான வழக்கை தொடர்வதற்கு வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையே பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம்  தேவையில்லை. இதை காரணமாக காட்டி மனுதாரரின் வழக்கை சிறு வழக்குகள் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளாதது சரியல்ல. எனவே, மனுதாரரின் மனுவை சிறு வழக்குகள் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை உயர் நீதிமன்ற பதிவகம், வாடகை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: