சீரமைப்பு பணி நடந்த 10 நாளில் தெற்குவள்ளியூர் பெரியகுளம் கரை விரிசல்

பணகுடி,செப்.30: தெற்குவள்ளியூர் பெரியகுளத்தில் சீரமைப்பு பணி நடந்த 10 நாளில் கரையில் விரிசல் ஏற்பட்டது. எனவே, குடிமராமத்து பணியில் முறைகேடு நடந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.  வள்ளியூர் அருகே தெற்குவள்ளியூர் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் கடந்த மாதம் குடிமராமத்து பணி நடைபெற்று வந்தது.  விவசாய சங்கத்தினர் 10 சதவீதம் நிதியுதவியுடன்  ரூ.99 லட்சத்தில் மராமத்து பணிகள் நடந்தன.

பெரியகுளத்தின் சுற்றளவு  6 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த குளத்தின் முலம் வள்ளியூர், புதுக்குளம், தெற்கு வள்ளியூர் உள்ளிட்ட பகுதியில்  1000 ஏக்கர் நிலங்கள் பயனடைவதோடு நீர் மட்டமும் பெருகும். இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி  நடந்த கரைகள் சீரமைப்பு பணியில்  அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு திருப்தி இல்லாததால் பணிகளை தொடரக்கூடாது என இயந்திரத்தை சிறைபிடித்த நிலையில் பணகுடி போலீசார்  சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.  இது குறித்து மராமத்து பணியில் முறைகேடு உள்ளதாக தினகரனில் கடந்த 27ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த சாரல் மழைக்கு குளத்தில் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு விரிசல் காரணமாக கரை உடைந்துள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் ரூ.99 லட்சம் என்னாச்சு என பொதுமக்கள் கேள்வி கேட்ட வண்ணம் உள்ளனர்.

Related Stories: