8 மாதங்களாக தொடரும் அவலம் மானூர் அருகே அரைகுறையில் நிற்கும் நீரோடை பாலம்

மானூர், செப். 25: நெல்லை அடுத்த மானூர் அருகே கட்டாரங்குளத்தில் கடந்த 8 மாதங்களாகியும் நிறைவுசெய்யப்படாமல் அரைகுறையில் நிற்கும் நீரோடை பாலம் பணியால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். நெல்லை அடுத்த மானூர் தாலுகாவுக்கு உட்பட்ட கட்டாரங்குளம் கிராமம் சங்கரன்கோவில் சாலை அழகியபாண்டியபுரத்தில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது. அழகியபாண்டியபுரத்தில் இருந்து நெடுஞ்சாலைத்துறை சாலை கட்டாரங்குளம், குப்பனாபுரம், செழியநல்லூர் பிராஞ்சேரி வழியாக மதுரை சாலை புதுக்குடியில் இணைக்கப்படுகிறது. இச்சாலையில் நெல்லையில் இலிருந்து அழகியபாண்டியபுரம் வழியாகவும், கங்கைகொண்டான் புதுக்குடி வழியாகவும் உள்ள இரு வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. செழியநல்லூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பள்ளி மாணவர்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். மதுரை சாலையில் இருந்து புதுக்குடியில் பிரிந்து கட்டாரங்குளம் அழகியபாண்டியபுரம் வழியாக சுரண்டை, தென்காசி, செங்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லவும் சாலை வசதி உள்ளது. இதனிடையே இச்சாலையில் உள்ள கட்டாரங்குளத்தின் கிராமம் வழியாக கடந்துசெல்லும் பெரிய நீரோடையில் பாலம் கட்டும்பணி கடந்த 8 மாதங்களாக அரைகுறையில் நிற்கிறது. இதனால் அவதிப்படும் கிராமமக்கள் இப்பணி தரமற்ற முறைில் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

குடியிருப்புக்குள் வெள்ளம்:  இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் கூறுகையில், ‘‘ இக்கிராமத்தின் மத்தியில் கடந்து செல்லும் ஓடை 10 மீட்டருக்கு மேல் அகலம் கொண்டது. இதில் கட்டாரங்குளத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரிய குளத்தில் இருந்து தண்ணீர் நிரம்பும் வேளையில் மறுகால் மூலமாக அதிகமான தண்ணீர் செல்லும். ஏற்கனவே ஓடை பல இடங்களில் அடைபட்டு கிராம குடியிருப்புக்குள் தண்ணீர் வரும் நிலை இருந்தது. அவ்வேளையில் கிராமத்தினரே அடைப்புகளை சரிசெய்து குடியிருப்புக்குள் ஏறாமல் பாதுகாத்துக்கொள்வர். இந்நிலையில் கிராமத்தின் மத்தியப்பகுதியில் கடந்து செல்லும் நெடுஞ்சாலைத்துறை சாலை மதுரை சாலையில் இருந்து சுரண்டை செங்கோட்டை வரையிலும் வணிக ரீதியாக பயன்படுத்தும் முக்கிய சாலையாகும்.

இச்சாலையில் உள்ள கால்வாயில் முன்னொரு காலத்தில் அமைக்கப்பட்ட ஓடுபாலம் அகலமாக இருந்தது. இதை அகற்றிவிட்டு நீரோடையில் குழாய் பாலம் அமைக்கும்  பணி கடந்த 8 மாதங்களாக அரைகுறையில் நிற்கிறது. அகலமான இருந்த ஓடையை இரண்டு பைப் கண்கள் அளவுக்கு சுருக்கி தரமற்ற முறையில் அமைக்கப்படுகிறது. இதனால் மழை காலத்தில் குளம் நிறைந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பாலத்தை கடக்கமுடியாமல் குடியிருப்புக்குள் புகும் அபாயம் ஏற்படும்.  அத்துடன் தரமற்று அமைக்கப்படும் பாலம் ஓடையில்  வரும் தண்ணீர் வேகத்திற்கு அடித்து செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மழை காலத்திற்கு முன்பாக கூடுதலாக ஒரு கண் அகலப்படுத்தி தரமுள்ள பாலமாக அமைக்க வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு’’ என்றார்.

Related Stories: