சுழல்நிதி பெற்று தருவதாக கூறி மகளிர் குழுவினரிடம் கமிஷன்

தென்காசி, செப். 24: சுழல்நிதி மற்றும் மானியம் பெற்று தருவதாக கமிஷன் பெற்றுக் கொண்டு மிரட்டும் கூட்டுறவு ஊழியர் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டாட்சியரிடம் சுய உதவிக்குழுவினர் மனு அளித்தனர். தென்காசி, வேதம்புதூர், அய்யாபுரம், கொட்டாகுளம்,  புல்லுக்காட்டுவலசை, வல்லம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுயஉதவிக்குழுக்களை  சேர்ந்த பெண்கள் 10க்கும் மேற்பட்டோர் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகம்  முன்பு திரண்டனர். பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அருணாசலத்திடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

செங்கோட்டையை சேர்ந்த அப்துல்சலாம்,  தென்காசி மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் சுபா மற்றும் தென்காசியை சேர்ந்த  நஜீமா ஆகியோர் எங்களிடம் வங்கியில் சுழல் நிதி மற்றும் மானியம் பெற்று  தருவதாக கூறி நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் கமிஷனாக  பெற்றுக் கொண்டனர். மூன்று மாதம் கடந்த நிலையில் இன்னும் நிதி கிடைக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் தர முடியாது என மிரட்டுகின்றனர். எனவே  இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories: