நாங்குநேரி அரசு மருத்துவமனையில் காலதாமதமாக பணிக்கு வரும் ஊழியர்களால் நோயாளிகள் பாதிப்பு டிஜிட்டல் வருகை பதிவு கருவி பொருத்த கோரிக்கை

நாங்குநேரி, செப். 19: நாங்குநேரி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவதாக எழுந்த புகாரையடுத்து டிஜிட்டல் வருகை பதிவு கருவி பொருத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். நாங்குநேரியில் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மகப்பேறு மற்றும் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக மருத்துவமனை ஊழியர்கள் பலர், சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் முறை வைத்து பணிக்கு வரும் ஊழியர்களிடையே பணி முடித்த ஊழியர்கள் வீட்டுக்குச் செல்ல முடியாமல் அடுத்த ஊழியர் வரும் வரை மருத்துவமனையிலேயே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஊழியர்களிடையே நிகழும் இந்த வருகை குழப்பத்தால் நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் உள்ளனர். குறிப்பாக புறநோயாளிகளாக வரும் பள்ளி செல்லும் மாணவர்கள், முதியவர்கள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர்.

நாங்குநேரி, தேசிய நெடுஞ்சாலையையொட்டி இருப்பதால் அங்கு அடிக்கடி நடக்கும் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களை இம்மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது ஊழியர்கள் பற்றாக்குறையால் நெல்லை, நாகர்கோவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே ஊழியர்களை வருகை குறைபாட்டை களையவும், நோயாளிகளின் நலன் கருதியும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் ஊழியர்களுக்கான டிஜிட்டல் வருகை பதிவு கருவியை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: