குறைதீர் முகாமில் அளிக்கப்படும் கோரிக்கை மனு மீது நடவடிக்கை இல்லை: கலெக்டரிடம் மக்கள் புகார்

ஆலந்தூர்: சென்னை மாவட்ட வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்களின் குறைகேட்கும் முகாம் கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலத்தில் நடந்தது. இந்த முகாமிற்கு, சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி தலைமை வகித்தார். ஆர்டிஓ நாராயணன், மற்றும் தாசில்தார்கள், கவுத்தி, செந்தில், ராஜேஸ்வரி, சுப்ரமணியன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் உள்ள செங்கேணியம்மன் கோயிலுக்கு சொந்தமான 5 சென்ட் இடத்தினை வருவாய் துறையினர் தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டதாகவும், இந்த பட்டாவினை ரத்து செய்யக்கோரி அந்தப்பகுதி பொதுமக்கள் மனுகொடுத்தனர். அதேபோல் பள்ளிக்கரணை தாய்நகர் நலச்சங்கத்தினர் தாய் நகரில் மழைநீர் கால்வாய் அமைத்து தரும்படியும், மடிப்பாக்கம் ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மனை பட்டா கேட்டு அலைவதாகவும், திருவான்மியூரை சேர்ந்த முத்துமாலை, விஜயா ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக விதவை பென்ஷன் கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித பலனும் இல்லை என்றும் இம்முறையாவது பென்ஷன் கிடைக்க ஏற்பாடு செய்யும் படி மனு கொடுத்தனர். தி.நகரை சேர்ந்த சக்தி என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக மனு கொடுத்தார். இவ்வாறு 300க்கும் மேற்பட்ட  மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

Advertising
Advertising

அப்போது பொதுமக்கள், ‘‘கிண்டி வட்டாட்சியர்  அலுவலகத்தில் பட்டா, வாரிசு சான்றிதழ், ஆதிதிராவிடர் சாதி சான்றிதழ்  மற்றும் முதியோர், விதவை, ஊனமுற்றோர் பென்ஷன் போன்றவை கேட்டு பலமுறை  மனுகொடுத்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. இங்குள்ள அதிகாரிகள் எப்போது  வந்தாலும் தாசில்தார் இல்லை என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர். எந்த  மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். மேலும்,  முதியோர்களை  அலைக்கழிக்கின்றனர்’’ என்றனர். இதையடுத்து கலெக்டர் சீத்தாலட்சுமி பேசுகையில், ‘‘அரசு சட்ட திட்ட விதிகளின் படிதான் நிதி உதவிகள் வழங்கப்படும். சொத்து உடையவர்களுக்கு முதியோர் பென்ஷன் வழங்கப்படாது. மனு கொடுப்பவர்கள் 2, 3 முறை சரி பார்த்தபின் கொடுங்கள். சரியான விவரங்கள் இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். உங்கள் மனுக்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பின் உங்களுக்கு தகவல் அளிக்கப்படும்” என்றார். முடிவில் தொகை, விபத்து நிதி ₹7.5 லட்சம், திருமண உதவி தொகை, விதவை, முதியோர் பென்ஷன் உள்பட ₹15 லட்சத்து 66 ஆயிரத்துக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Related Stories: