வாகன சோதனையின்போது மொபட்டில் கடத்திய 90 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

ஆவடி, செப்.17: புழல்- மதுரவாயல் புறவழிச்சாலை, அம்பத்தூர் வழியாக குட்கா கடத்துவதாக அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடிக்கு ரகசிய தகவல் வந்தது.  அவரது உத்தரவின் பேரில் எஸ்.ஐ மார்ட்டின் மைக்கேல் தலைமையில் போலீசார் அம்பத்தூர், கள்ளிகுப்பம் சுங்கச்சாவடி அருகே நேற்றுமுன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மொபட்டில் கோணி பைகளுடன் வந்த ஆசாமியை மடக்கிப்பிடித்து பைகளை சோதனை செய்தனர். அதில், குட்கா உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அம்பத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

Advertising
Advertising

விசாரணையில், சென்னை அடுத்த ஊரப்பாக்கம், எம்ஜிஆர் நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (39) என்பதும், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், இவர் திருவள்ளூர் அருகே காரனோடை, ஜி.என்.டி சாலையில் மளிகைக்கடை நடத்தி வரும் சங்கரலிங்கம் (56) என்பவரிடமிருந்து குட்கா பொருட்களை வாங்கி, மதுரவாயல் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.இதனையடுத்து, சங்கரலிங்கம் கடையில் நடத்திய சோதனைக்குப்பின் இருவரிடமும் இருந்து சுமார் 90 கிலோ எடையுள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைதுசெய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மளிகைக்கடையில் போதைப் பொருட்கள் சிக்கியது

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் உள்ள மளிகைக்கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பதாக செங்குன்றம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகர், இளஞ்செழியன் தெருவில் உள்ள ஒரு மளிகை கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கடைக்குள் சுமார் ₹1.50 லட்சம் மதிப்பில் பான்பராக் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. இதையடுத்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டந்தாங்கல், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த கடை உரிமையாளர் ராஜேஷ்குமார் (36) கைது செய்தனர். பின்னர் அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வரும் கும்பல் குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: