மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த பழங்கால முறையில் கிணறுகள் சீரமைப்பு

சென்னை, செப். 17 : சீரமைக்கபடாமல் கிடந்த கிணறுகளை பழங்கால முறையில் சீரமைத்து மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு சென்னை மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகள், கட்டிடங்கள், பெரு நிறுவனங்களின் கட்டிடங்கள், பல் அடுக்கு நிறுவனங்கள் ஆகியவற்றில் அடுத்த மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றாதவர்கள் மீது விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள வீடுகளை ஆய்வு செய்ய வார்டு ஒன்றுக்கு ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். வார்டு குழு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

இந்த குழுக்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தும் போது மழைநீர் சேகரிப்பு இல்லாத வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த ஆலோசனை வழங்கி வருகிறார்கள். அதன்படி வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுவரை 2 லட்சத்து 92 ஆயிரத்து 827 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 543 வீடுகளில் மழை நீர் சேகரிப்பு உள்ளன. புதிதாக 9 ஆயிரம் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 38 ஆயிரத்து 982 வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் சிறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதை தவிர்த்து 66 ஆயிரத்து 453 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதிகள் இல்லாமல் உள்ளது.

இந்நிலையில் இதுவரை மழைநீர் கட்டமைப்புகளை அமைக்க இந்த 66 ஆயிரம் வீடுகளுக்கு நோட்டீஸ் அளிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் அக்டோபர் மாத இறுதிக்குள் மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தவிர்த்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழங்கால உறை கிணறுகளையும் சென்னை மாநகராட்சி சீரமைத்துள்ளது. அதன்படி இதுவரை 3241 கிணறுகள் சீரமைக்ககப்பட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு கிணறுகள் பழங்கால முறையில் சீரமைக்கப்பட்டுள்ளன. அதன்படி பெருங்குடி மண்டலத்தில் மடிப்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடத்தில் உள்ள கிணறுகள் பழங்கால முறையில் சீரமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: