×

தேன்கனிக்கோட்டையில் பள்ளி முன்பிருந்த வேகத்தடை அகற்றியதால் விபத்து அபாயம்

தேன்கனிக்கோட்டை, செப்.17:தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, பத்திரபதிவு அலுவலகம், விஏஓ அலுவலகம்,   பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. போக்குவரத்து நெரிசலை குறைக்க, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தளி கூட்டுரோடு ஆகிய இடங்களில், நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது. இந்நிலையில், தேன்கனிக்கோட்டையில் தாலுகா அலுவலகம் முதல் அரசு போக்குவரத்து பணிமனை வரை, புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதன் காரணமாக, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தளி கூட்டுரோடு பகுதிகளில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. இப்பகுதி குறுகலான சாலை என்பதால், மின்னல் வேகத்தில் வரும் வாகனங்களால் மீண்டும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையை கடக்க முடியாமல் மாணவிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் ஏற்கனவே நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதால், வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்போது, சாலை பணிக்காக வேகத்தடை அகற்றப்பட்டு விட்டதால், மீண்டும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பெண்கள் பள்ளி, கோட்டைவாசல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கெலமங்கலம் சாலை கூட்ரோடு ஆகிய இடங்களில் வேகத்தடை அமைத்து, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 

Tags : removal ,school speed boom ,
× RELATED போக்சோ சட்டத்தில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு