ராயக்கோட்டை-ஓசூர் வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை அறிய எச்சரிக்கை பலகை

சூளகிரி, செப்.11: சூளகிரியில் ராயக்கோட்டை-ஓசூர் சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சூளகிரி தாலுகாவில் வனத்தையொட்டி கிராமங்கள் உள்ளது. சூளகிரி சுற்றுவட்டார வனப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த வனத்தில் யானை தவிர சிறுத்தை, புலி, மலைப்பாம்புகள், மான்கள், காட்டு பன்றிகள் மற்றும் பலவகையான விலங்குகளும் உள்ளன. சானமாவு வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களாக பென்னிக்கல், டி.கொத்தப்பள்ளி, கொம்மேபள்ளி, குருபரப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, அகரம், ஒபேபாளையம், உத்தனபள்ளி ஆகிய பல கிராமங்கள் சானமாவு வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிக்கு ஊடாக ராயக்கோட்டை-ஓசூர் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. உத்தனபள்ளி முதல் ஒன்னல்வாடி வரை 6 கிலோ மீட்டர் சாலை வனத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து போடூர்பள்ளத்திற்கு யானைகள் வருகிறது. இந்த சாலையில் யானைகள் நடமாட்டம் குறித்த அறிவிப்பு பலகைகள் மற்றும் மின்விளக்குகள் எதுவும் வைக்கப்படவில்லை. இதனால், இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் திக், திக் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் நடமாடும் பகுதியான ராயக்கோட்டை-ஓசூர் சாலையை தவிர்த்து மேலுமலை-கோபசந்திரம் தேசிய நெஞ்சாலையில் யானைகள் நடமாடும் பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டத்தை அறிய வனப்பகுதிக்குள் எச்சரிக்கை பலகை மற்றும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: