உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிலை கண்டெடுப்பு : தொல்லியல் துறை தகவல்

சென்னை: உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே, கிராம மக்கள் காவல் தெய்வமாக கருதி ஒரு சிலைக்கு தினமும் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழ்நாடு தொல்லியல் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் மார்க்சியா காந்தி, தனது குழுவினருடன் இணைந்து மேற்கண்ட சிலையை ஆய்வு செய்தார். அதில், அந்த சிலை சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் 8ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தின் கொற்றவை சிலை என தெரியவந்தது.

4 அடி உயரம், 2 அடி அகலம், 8 கரங்களை கொண்ட இச்சிலையின் இடது காலின் அருகே, தன் தலையை தானே பலி கொடுக்கும் நவகண்ட வீரனின் சிற்பம் உள்ளது. இதேபோல் இந்த கிராமத்தில் நடுநிலைப்பள்ளி அருகே உள்ள விளையாட்டு திடல் எதிரே, மரத்தடியில் 4 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அய்யனார் சிலை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த கிராமத்தில் பல்லவர்கள் ஆட்சி செய்ததற்கு இச்சிலைகள் ஒரு சான்றாகும். எனவே தொல்லியல் துறையினர் இந்த கிராமத்தில் உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டால், மேலும் பல சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.

Related Stories: