போளூரில் மிளகாய் பொடி தூவி துணிகரம் ஓய்வு ெபற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி உடன் வந்த 3 பேர் தப்பி ஓட்டம்

திருவண்ணாமலை, செப்.11: போளூரில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில், மிளகாய் பொடி தூவி திருட முயன்ற வாலிபரை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் சிவசாம்பு(58). இவர் கடலாடி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு சரண்யா, ஹேமலதா என 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி திருவண்ணாமலையில் வசித்து வருகின்றனர். மகன் சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சிவசாம்பு கடந்த ஒரு மாதமாக தனது மனைவியுடன், திருவண்ணாமலையில் உள்ள மகள் வீட்டில் தங்கியுள்ளார். இரவில் மட்டும் போளூரில் உள்ள வீட்டில் வந்து தங்கிவிட்டு, மறுநாள் காலை மகள் வீட்டிற்கு சென்றுவிடுவாராம். அதேபோல், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சிவசாம்பு, போளூரில் உள்ள வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்தார். அப்போது ஒரு ஆசாமி, வீட்டின் உள்ளே இருந்த டிவியை எடுத்துக்கொண்டு மாடிப்படி செல்லும் வழியில் வைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே அந்த ஆசாமியை பிடிக்க முயன்றார். அந்த ஆசாமி மாடிப்படி வழியாக ஏறி, மேல் இருந்து கீழே குதித்து தப்பியோடினார். சிவசாம்புவின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அந்த ஆசாமியை விரட்டி சென்று மடக்கி பிடித்து சரமாரி தர்மஅடி கொடுத்தனர்.இதுகுறித்து சிவசாம்பு போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டு, போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அவர் காளசமுத்திரத்தை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ்(30) என்பது தெரியவந்தது. இந்நிலையில் வீட்டிற்குள் சென்ற மர்ம ஆசாமி பீரோவை உடைத்து, அதில் இருந்த பொருட்கள் எடுத்து வீசியதும், போலீசாரிடம் இருந்து தப்பிக்க வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவியதும் தெரிந்தது. ஆனால், பிடிபட்ட சதீஷிடம் நகைகள், பணம் எதுவும் இல்லை. விசாரணையில் மேலும் 3 பேர் திருட வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : house ,Polur ,Sub-Inspector's ,
× RELATED வாலிபர்கள் துரத்தியதால் விபரீதம் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பலி