பெசன்ட்நகர் கடற்கரையில் நடைபெற்ற வாலிபர் கொலையில் 9 பேர் கைது: பரபரப்பு வாக்குமூலம்

வேளச்சேரி: சென்னை டி.பி. சத்திரம், குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பென்னிராஜ் (20). இவர் நேற்று முன்தினம் மாலை தனது தாய் அமுலு மற்றும் இவரது நண்பர்கள் சதீஷ்குமார், ஷியாம்குமார் ஆகியோருடன் பெசன்ட் நகர்  வேளாங்கண்ணி கோயில் தேர் திருவிழாவில் கலந்துகொள்ள சென்றார்.அங்கு, இரவு 11.30 மணியளவில் நண்பர்களுடன் சேர்ந்து ராட்டினம் விளையாடிவிட்டு வருவதாக தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த வாலிபர்கள் சிலருடன் ஏற்பட்ட தகராறில் பென்னிராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டார்.தகவலறிந்து வந்த போலீசார், பென்னிராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தினர். அதில், துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த வீரகுமார் (26), தீபக் (21), அருண்குமார் (20), முத்துக்குமார் (25), சக்திவேல் (25), சதீஷ் (எ) சகாபுதீன் (20), சாமுவேல் (20), சாம்சன் (23),  விஜய் (22) உள்பட 9 பேர், பென்னிகுமாரை கொலை செய்தது  தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘‘முத்துவேல் கடற்கரையில் அமர்ந்திருந்தபோது, இவர்கள் அருகில் பென்னிராஜ் சிறுநீர் கழித்துள்ளார். இது, அவர்கள் மீது பட்டுள்ளது. அப்போது முத்துவேல் “டேய் ஏன் இங்கு சிறுநீர் கழிக்கிறாய்.  தள்ளிப் போ” என கூறியுள்ளார். அவர்களிடம் பென்னிராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், பென்னிராஜை சரமாரியாக கத்தியால் வெட்டி கொன்றுவிட்டு தப்பியது தெரிந்தது. இதையடுத்து கைதான 9  பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.கைதான வீரா மற்றும் இவர்களது நண்பர்கள் மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் அடிதடி, கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.கொலையான பென்னிராஜ் சம்பவத்தின் போது விளையாடி விட்டு வருவதாக தனது தாயிடம் கூறி விட்டு மறைவிடத்தில் சென்று கஞ்சா அடித்துள்ளார். போதை தலைக்கேறியதும் அதே பகுதியில் சிறுநீர் கழித்தபோது அங்கிருந்தவர்களுடன்  தகராறு ஏற்பட்டுள்ளது.  எதிர்தரப்பு கத்தி வைத்திருந்தும் இவர் போதையில் பயப்படாமல் சண்டை போட்டதால் கொலையானது தெரிய வந்தது.

Related Stories: