பம்மல் நகராட்சியில் குப்பை தரம் பிரிக்கும் பணி சுணக்கம்: தொற்றுநோய் பரவும் அபாயம்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தினசரி குப்பையை சேகரித்து, பம்மல்  விஸ்வேசபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படும் பசுமை உரக் குடில் வளாகத்துக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு, மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பை அப்புறப்படுத்தப்படும். இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த உரக்கிடங்கு வளாகத்தில் கொட்டப்படும் குப்பை முறையாக தரம் பிரிக்காததால், அப்படியே மலைபோல் குவிந்துள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால்,  சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  திறந்தவெளியில் குவித்து வைத்துள்ள இந்த குப்பையை மாடு, நாய் உள்ளிட்டவை கிளறுவதால் காற்றில் குப்பை சிதறி, அந்த பகுதி முழுவதும்  குப்பைக்காடாக காட்சியளிக்கிறது. மேலும், இந்த குப்பையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அருகில் உள்ள திருநீர்மலை நாட்டுக் கால்வாயில் கலந்து சாக்கடையாக மாறி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பம்மல் நகராட்சியில் துப்புரவு பணி மற்றும் குப்பையை தரம் பிரிக்கும் பணியை ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனம், முறையாக பணி மேற்கொள்வதில்லை. குறிப்பாக, குப்பையை தரம்  பிரிக்காமல் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இதனை, நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பீதியில் உள்ளோம். ஆனால், குப்பையை தரம் பிரிப்பதாக மேற்கண்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு பெரிய அளவில் நிதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை  நடத்த வேண்டும். மேலும், பல மாதங்களாக காலியாக உள்ள நகராட்சி ஆணையர் பணியிடத்திற்கு விரைவில் அதிகாரியை நியமிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: