நாச்சிக்குப்பம் அரசு பள்ளியில் சைல்டுலைன் விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி, ஆக.22: வேப்பனஹள்ளி ஒன்றியம் நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சைல்டுலைன் 1098 குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு சைல்டுலைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி தலைமை வகித்தார். திட்ட ஆலோசகர் ஹேமாமாலினி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை விஜயா வரவேற்றார். முகாமில், 18 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், இளம் வயது திருமணங்கள்,  குழந்தை தொழிலாளர் முறை, பாலியல் ரீதியான துன்புறுத்தல், வீட்டை விட்டு ஓடிப்போகுதல், குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

இளம் வயது திருமணம், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட குற்றங்கள் நிகழ்வதை அறிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் ஜேஆர்சி மாணவ, மாணவிகள் இளம் வயது திருமணம் குறித்து நாடகம், பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் பெலிசிட்டாமேரி, திட்ட உறுப்பினர்கள் ரமேஷ், ஸ்ரீதர், செந்தில்குமார், விஜயகுமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: