மின் இணைப்பை மாற்றியபோது மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து

„ * உதவி செயற்பொறியாளர் உட்பட 3 பேர் படுகாயம்

„ * போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே பரபரப்பு
Advertising
Advertising

சென்னை: வேப்பேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பை மாற்றியபோது ஏற்பட்ட தீ விபத்தில் உதவி செயற்பொறியாளர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே நடந்த இந்த சம்பவத்தால்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே மின்வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று காலை உதவி செயற்பொறியாளர் சுரேஷ், போர்மேன் லாரன்ஸ்  மற்றும் ஒப்பந்த ஊழியர் பரணி ஆகியோர் பணியில் இருந்தனர். காலை 9.30 மணிக்கு மின் இணைப்பு ஒன்றை உதவி செயற்பொறியாளர் சுரேஷ் உட்பட 3 பேரும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது உயர் மின் அழுத்தத்தால் திடீரென பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்தது. இதில் அருகில் நின்று இருந்த உதவி செயற்பொறியாளர் சுரேஷ், போர்மேன் லாரன்ஸ், ஒப்பந்த ஊழியர்கள் மீது தீப்பொறி பட்டு உடல் முழுவதும் தீக்காயம்  ஏற்பட்டது. வலிதாங்க முடியாமல் மூன்று பேரும் அலறி துடித்தனர். சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

வேப்பேரி, எழும்பூர் பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அலுவலகம் முழுவதும் தீ பரவாமல் தடுத்தனர். பின்னர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய மூன்று பேரையும் மீட்டு ஆயிரம்விளக்கு பகுதி  தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உதவி செயற்பொறியாளர் சுரேஷ் மற்றும் போர்மேன் லாரன்ஸ் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வேப்பேரி, பெரியமேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உரிய நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே நடந்த இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: