திருவொற்றியூர் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் குடியிருப்புக்கு மத்தியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திருவொற்றியூர் டி.எஸ்.ஆர்.நகர் ஒத்தவாடை தெருவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஒரு வீட்டின் மாடியில் செல்போன் டவர் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இது சம்மந்தமான ஆட்சேபனை கடிதத்தை  திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் கொடுத்தனர். ஆனால், அதையும் மீறி அந்த வீட்டில் செல்போன் டவர் அமைப்பதற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

இதை கண்டித்து அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை செல்போன் டவர் அமைக்கப்படும் இடத்திற்கு முன் திரண்டு, ‘‘குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் டவர் அமைத்தால், கதிர்வீச்சால் மக்கள் பாதிக்கப்படும்  நிலை ஏற்படும். எனவே, இங்கு செல்போன் டவரை பொருத்தக்கூடாது,’’ என கண்டன கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   தகவலறிந்து வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று  போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: