லேப்டாப் வழங்காததை கண்டித்து மாணவிகள் திடீர் சாலை மறியல்

சென்னை: தமிழக அரசு மூலம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ   மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா முதல்வராக  இருந்த போது தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த  நிலையில் கடந்த 2017 - 2018 மற்றும் 2018 - 2019ம் ஆண்டு மாணவர்களுக்கு  இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை.இந்நிலையில், இந்த கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி  வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கீழச்சேரி அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு இலவச லேப்டாப் நேற்று வழங்கப்பட்டது. பள்ளியில் பயிலும் 400 மாணவிகளுக்கு, வெறும் 240 லேப்டாப்கள் மட்டுமே அரசு வழங்கப்பட்டது. 160 மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை.இதனால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களுக்கும் லேப்டாப் வழங்கக்கோரி நேற்று காலை மப்பேடு போலீஸ் நிலையம் அருகே மப்பேடு கூட்டுச்சாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த மப்பேடு போலீசார் பள்ளி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர் வந்து பதில் கூறினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என மாணவிகள் கூறினர். ஆனால், பள்ளி தலைமை ஆசிரியர் வர மறுத்து விட்டதாக போலீசார் கூறினர். இதையடுத்து மாணவிகள் திடீரென சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்ராயன் வந்து, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, விடுபட்ட மாணவிகளுக்கு விரைவில் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவிகள் கலைந்து சென்றனர்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் அரசு மேல்நிலை பள்ளிகள்  திறந்து 2 மாதம் ஆகும் நிலையில் மடிகணினி வந்து ஒரு மாதம் ஆகிறது. இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும், கடந்த 2  வருடத்திற்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்களுக்கும் இதுவரை லேப்டாப்  வழங்கவில்லை. அதை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.இந்நிலையில், பள்ளிப்பட்டு, திருத்தணி தொகுதியில் உள்ள ஆர்.கே. பேட்டை,  அத்திமாஞ்சேரிப்பேட்டை, வங்கனூர், பாலாபுரம், காளிகாபுரம் உள்ளிட்ட  பகுதியில் பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் மடிகணினி வழங்கும்  நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பல மாணவர்களுக்கு லேப்டாப்  வழங்கப்படவில்லை.

இதுபோல் அத்திமாஞ்சேரிபேட்டை அரசு மேல்நிலையில் கடந்தாண்டு பிளஸ்2 படித்த மாணவர்களுக்கும் மடிகணினி வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை இப்பள்ளியில் படித்த 50க்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவர்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.திடீரென  பள்ளி முன்புள்ள ஆர்.கே.பேட்டை-பள்ளிப்பட்டு சாலையில் மறியலில்  ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதட்டூர்பேட்டை போலீசார்  மற்றும் பள்ளி தலைமையாசிரியர் தேவசகாயம் சம்பவ இடத்துக்கு விரைந்து  வந்தனர்.அப்போது, கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி  அனைவருக்கும் லேப்டாப் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.  இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கடந்த 2017-18 கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர்களுக்கு இதுவரை இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஆங்காங்கே லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், தற்போது படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கே முழுமையாக வழங்காமல் அரசு திணறி வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த கல்வியாண்டு பிளஸ் 2 முடித்த 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இதுவரை லேப்டாப் வழங்கப்படவில்லை. இதையடுத்து முன்னாள் மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் புகார் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: