ஈஞ்சம்பாக்கத்தில் 32 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: திமுக எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் 32 ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் நேற்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.

அரவிந்த் ரமேஷ் (திமுக): சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் பெத்தேல் நகர் என்கிற பகுதியில் கைவேலி மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் 32 ஆண்டுகளாக 3 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இன்றைக்கு அவர்களை அப்புறப்படுத்துகின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கைவேலி நிலங்களையெல்லாம் கிராம நத்தங்களாக அரசு மாற்றி அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று 2010ல் அரசாணை வெளியிடப்பட்டது. வனத்துறை, வருவாய் துறை அது சதுப்பு நிலம் இல்லை என்று உறுதி செய்துள்ளது. ஆகவே அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
Advertising
Advertising

வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்: உறுப்பினர் கூறிய அந்த இடங்கள் புறம்போக்கு நிலங்களாக இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 22-1-2019 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் உள்ளடக்கிய ஆய்வு கூட்டத்தில் ஆக்கிரமிப்பு வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில் ஆக்கிரமிப்புகளில் உள்ளவர்களை அப்புறப்படுத்தி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பெரும்பாக்கம் பகுதியில் தற்காலிகமாக குடியமர்த்தி, புறம்போக்கு நிலத்தை மேய்க்கால் வகைப்பாடாக மாற்றம் செய்து அரசிடம் உரிய அனுமதி பெற்று அவர்களை நிரந்தரமாக குடியமர்த்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவரை அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகளை கணக்கெடுக்கும் பணிக்காகவும் மற்றும் மறு குடியமர்வு பணிக்காக ₹9.5 கோடி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடம் கோரப்படும். இந்த கோப்பு தற்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு அனுப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதிலும் அந்த ஏழை, எளிய மக்களுக்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: