×

குறைப்பிரசவ குழந்தையை காப்பாற்றி எடை அதிகரிக்கச்செய்த அரசு டாக்டர்கள்

ஓசூர், ஜூலை 16: ஓசூரில், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றி உடல் எடையை அதிகரிக்கச் செய்த அரசு டாக்டர்களுக்கு பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.ஓசூர் அருகே பட்டவராப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புட்ராஜ்(28). இவரது மனைவி தேஜஸ்வினி(23). இவர், கர்ப்பமாக இருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயர் ரத்த அழுத்தம் காரணமாக தாயின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடியும். குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 15ம் தேதி குறைப்பிரசவத்தில் 7வது மாதத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது அந்த பச்சிளங்குழந்தை 855 கிலோ கிராம் எடையில் இருந்துள்ளது. மேலும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை காணப்பட்டது. இதனைதொடர்ந்து குழந்தையின் பெற்றோர் தனியார் மருத்துவமனையிலிருந்து குழந்தையை ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அரசு மருத்துவர்கள் குழந்தைக்கு தொடர் சிகிச்சையளித்து வந்தனர். கடந்த 60 நாட்கள் மருத்துவர்களின் தொடர் சிசிச்சையால் குழந்தையின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது குழந்தையின் உடல் எடை 1240 கிலோ கிராமாக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் பச்சிளங்குழந்தை உயிர் காக்கப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதால் குழந்தையின் பெற்றோர் ஓசூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு