சென்னை மாநகரத்திற்குள் நுழையும் முக்கிய இடமான பெருங்களத்தூரில் பல்லடுக்கு மேம்பாலம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல்

ெசன்னை, ஜூலை 16: சட்டசபையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்து பேசியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் இத்துறையின் வாயிலாக மொத்தம் ₹19 ஆயிரத்து 608.81 கோடி மதிப்பில் 20 ஆயிரத்து 237 கி.மீ. சாலைகளில் அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 281 பாலங்கள் மற்றும் 629 சிறுபாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டன. இது தவிர சாலை பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்கு ₹2 ஆயிரத்து 991.74 கோடியில் செலவிடப்பட்டு 10 ஆயிரத்து 486 கி.மீ. நீளம் உள்ள சாலைகள் இடர்பாடற்ற போக்குவரத்தினை கையாள ஏதுவாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. 42 நகரங்களில் புறவழிச்சாலைப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 24 புறவழிச்சாலைப் பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை ெபருநகர பகுதிகளில் தற்பொழுது 9 முக்கிய இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவைகள்  கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில், கொளத்தூர் இரட்டை ஏரி, கொரட்டூர், கீழ்கட்டளை, வேளச்சேரி சந்திப்பு,  பல்லாவரம், மேடவாக்கம், வண்டலூர், திருவெற்றியூர்- பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே நடைபெறும் பாலப் விரைவில் முடிக்கப்படும்.

Advertising
Advertising

இவற்றிற்கும் மேலாக சென்னை நகர வாகனங்கள் வெளியூர் செல்லும் போதும் மற்றும் புறநகர வாகனங்கள் சென்னை மாநகரத்திற்குள் நுழையும் முக்கிய இடமான பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலை தீர்வு காணும் வகையில் மிகப்பெரிய பல்லடுக்கு பாலம் ஒன்றை அமைக்க தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணி துவங்கப்படவுள்ளது.மேலும் சென்னை மாநகரத்தின் முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பாலம் அல்லது பல்லடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.  சென்னை மாநகரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்வதை தவிர்க்கும் பொருட்டு எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி மாமல்லபுரம் அருகில் உள்ள பூஞ்சேரியில் முடிவடையும் வகையில் 133.38 கி.மீ. நீளமுள்ள சென்னை எல்லைச் சாலையை செயல்படுத்த நிலம் கையகப்படுத்தும் பணி பல்வேறு நிலையில் உள்ளது. 25.11 கி.மீ நீளமுள்ள சாலை (பகுதி-1) 2 ஆயிரத்து ₹504.63 கோடியில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதி உதவி மூலம் பணி துவங்கப்படவுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ₹2 ஆயிரத்து 662.62 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவற்றில் ₹2,026.60 கோடி ரூபாய் செலவில் 819 கி.மீ நீளமுள்ள 78 சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் ஆயிரத்து ₹291.26  கோடியில் 1,778 கி.மீ நீளம், 279 சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடலுார் துறைமுகம் ஆழ்கடல், அனைத்து பருவகால கப்பலணையும், துறைமுகமாக மைய அரசின் நிதியுதவியுடன் சுமார் ₹135 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி துறைமுகத்தில் விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள படகுத் துறையினை சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காக  100 மீ அளவிற்கு நீட்டிப்பு செய்வதற்கு ₹20 கோடியில், மைய அரசின் நிதியுதவியுடன் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: