ஊழியர்கள், உரிமையாளரை தாக்கி பெட்ரோல் பங்க் சூறை : 9 பேருக்கு வலை

தாம்பரம், ஜூலை 16: ஊழி யர்கள், உரிமையாளரை தாக்கி பெட்ரோல் பங்க் சூறையாடிய 9 பேரை போலீசார்  வலைவீசி தேடி வருகின்றனர். பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலப்பாக்கம், காந்தி சாலையை சேர்ந்த ராஜீவ்காந்தி (31), அதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் இரவு நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த மணி என்பவர், 2 பேருடன் ஆட்டோவில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த இளவரசன் (23) என்பவர், பெட்ரோல் போடாமல் செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணி மற்றும் அவரது நண்பர்கள் இளவரசனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

Advertising
Advertising

இதை பார்த்த சக ஊழியர்கள் பதிலுக்கு தாக்கியுள்ளனர். அங்கிருந்து சென்ற மணி சிறிது நேரத்தில் 6 பேருடன் வந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் உரிமையாளரான ராஜீவ்காந்தி ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பங்க் உரிமையாளர் ராஜீவ்காந்தி கையில் வெட்டு விழுந்தது. பின்னர், பெட்ரோல் பங்க்கையும் அடித்து உடைத்து சூறையாடிவிட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மணி மற்றும் அவரது நண்பர்கள் பிரவின், விவேக், உதயா, நவீன், வெங்கட், சந்தோஷ், ராம் மற்றும் சிவா ஆகிய ஒன்பது பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: