தண்ணீர் தேடி வந்தபோது ரயிலில் சிக்கி புள்ளிமான் சாவு

சென்னை: காஞ்சிபுரம் அருகே கீழம்பி ஏரிப்பகுதி மற்றும் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் வனப்பகுதிகளில் ஏராளமான புள்ளிமான், வெளிமான், மயில், சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, முயல் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, காடுகளை விட்டு, வன உயிரினங்கள் வெளியில் வருவது அரிதாக இருந்தது. தற்போது, தண்ணீர் மற்றும் சரியான உணவு கிடைக்காததால் அவை, காடுகளில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள கிராம குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு படையெடுக்கின்றன. இதுபோல் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்கு வரும் மான்களை, நாய்கள், விரட்டி விரட்டி கடிக்கின்றன. சாலையை கடக்கும்போது, வாகனங்களில் சிக்கி, அவை இறக்கின்றன.

Advertising
Advertising

இந்நிலையில், நேற்று காலை ஒரு பெண் புள்ளிமான், தண்ணீர் தேடி காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே சுற்றி திரிந்தது. அப்போது, தண்டவாளத்தை கடந்தபோது, திருமால்பூரில் இருந்த சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தது. தகவலறிந்து வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்ற, இறந்து கிடந்த புள்ளிமானை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். காடுகளில் உள்ள குளம், குட்டைகளில் நீர் இல்லாததாலேயே, மான்கள் தண்ணீரை தேடி வெளியேறுகிறது. எனவே வனப்பகுதிகளில் விலங்குகளை பாதுகாக்க தண்ணீர் வசதி ஏற்படுத்த தரவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: