போச்சம்பள்ளி, மத்தூர் பகுதியில் வறட்சியால் காய்ந்து கருகிய பனை மரங்கள்

போச்சம்பள்ளி, ஜூன் 21:  போச்சம்பள்ளி, மத்தூர் பகுதியில் கடும் வறட்சியால் பனைமரங்கள் காய்ந்து கருகியுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் மத்தூர் பகுதியில், ஏராளமான பனை மற்றும் தென்னை மரங்கள் உள்ளன.  குறிப்பாக போச்சம்பள்ளி, திப்பனூர், களர்பதி, மலையாண்டள்ளி, ஆனந்தூர், திருவணப்பட்டி, மத்தூர், சானிப்பட்டி, கவுண்டனூர், புளியாண்டப்பட்டி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பனை மரங்கள் உள்ளன.

கடந்த ஆண்டில் பருவமழை பொய்த்ததால், தற்போது மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், போச்சம்பள்ளி மற்றும் மத்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கான பனைமரங்கள் காய்ந்து கருகி, மொட்டையாக உள்ளது. இந்த மரங்களை விவசாயிகள் வெட்டி, செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பனை மரங்கள் மூலம் பதநீர், நுங்கு, வெல்லம் மற்றும் பல்வேறு பொருட்கள் கிடைத்து வந்தன.

ஆனால், வறட்சியால் தற்போது மரங்கள் காய்ந்து கருகி மொட்டையாகி வருகிறது. இதனால், பனைமரங்கள் மூலம் கிடைத்து வந்த பொருட்கள் தடைபட்டு, விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது காய்ந்த மரங்களை வெட்டி, செங்கல் சூளைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம்,’ என்றனர்.

Related Stories: