தொழிலாளர் துறையில் உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு

கிருஷ்ணகிரி, ஜூன் 19: தொழிலாளர் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கிருஷ்ணகிரியில் நடக்கிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஞானவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளர் துறையில், கோவை மண்டலத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), அலுவலகத்தில் நடக்கிறது. தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அழைப்புக் கடிதம் பெறப்படாத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், கிருஷ்ணகிரியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை வரும் 20, 21ம் தேதிகளில் நேரில் அணுகி, அழைப்புக் கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம். அழைப்பு கடிதத்தை பெற நேரில் வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன், அதன் நகல் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை ஒட்டி அ அல்லது ஆ பிரிவு அரசு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வர வேண்டும். மேலும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரும் விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அசல் ஆவணத்தினை கொண்டுவர வேண்டும். இவ்வாறு  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : field ,Labor ,
× RELATED நெல்லை அருகே விஷமிகள்...