கொருக்குப்பேட்டையில் சரக்கு ரயில் தடம் புரண்டது; போக்குவரத்து பாதிப்பு

பெரம்பூர்: தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை இடையே கூட்ஸ் ஷெட் யார்டு உள்ளது. இங்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து சரக்குகள் கொண்டு வரப்பட்டு, பின்னர் சென்னை நகரில் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த ஒரு கூட்ஸ் ரயில், தண்டையார்பேட்டை கூட்ஸ் ஷெட்டில் சரக்குகளை இறக்கியது. பின்னர் மீண்டும் மதுரை செல்வதற்காக, நேற்று காலை கூட்ஸ் ரயிலுடன் புறப்பட்டனர். அப்போது அந்த ரயிலின் 2 சரக்கு பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் விரைந்து வந்தனர். பின்னர் தடம் புரண்ட சரக்கு பெட்டிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு அந்த ரயில் நேற்று காலை 8 மணியளவில் மதுரை நோக்கி புறப்பட்டது.

கூட்ஸ் ரயில் தடத்தில் இருந்து மெயின் லைனுக்கு செல்லும் சந்திப்பில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால், அங்கு சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரயில் வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த கூட்ஸ் ரயிலில் சரக்குகள் இல்லாத காலி பெட்டி என்பதால், அவற்றை மீட்கும் பணிகள் எளிதாக முடிந்தது. இதுவே அப்பெட்டிகளில் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்தால், அவற்றை சரிசெய்ய காலதாமதம் ஏற்பட்டிருக்கும், என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: