புறநகர் கல்குட்டைகளில் மரணங்கள் அதிகரிப்பு குடிநீரின் சுகாதாரம் கேள்விக்குறி

பல்லாவரம்: சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இவற்றில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமற்றதாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான திரிசூலம், பொழிச்சலூர், பம்மல், அனகாபுத்தூர், மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான கல்குவாரி குட்டைகள் உள்ளன. மழைக்காலங்களில் இங்குள்ள ராட்சத பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கின்றன.

Advertising
Advertising

சென்னைக்கு குடிநீர் ஆதாரமான புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் ஆண்டுதோறும் ேகாடை காலங்களில் வறண்டு விடுவதால், மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, குடிநீர் வாரிய அதிகாரிகள், கடந்த சில ஆண்டுகளாக, சென்னை புறநகரில் உள்ள மேற்கண்ட கல்குவாரி குட்டைகளில் தேங்கியுள்ள நீரை ராட்சத மின் மோட்டார் மூலம் உறிஞ்சி, சுத்திகரித்து பொதுமக்களுக்கு குடிநீராக வழங்கி வருகின்றனர்.    

அதன்படி, இந்த ஆண்டும் மேற்கண்ட கல்குவாரி குட்டைகளில் இருந்து தண்ணீரை பெற்று, சுத்திகரிப்பு செய்து, சென்னை பகுதி மக்களுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த கல்குவாரி குட்டைகள் அனைத்தும் முறையாக தடுப்பு வேலி அமைத்து, பாதுகாக்கப்படாமல் திறந்தநிலையில் உள்ளன.

இதனால், இங்கு குளிக்க செல்லும் பலர் நீரில் மூழ்கி இறப்பது தினசரி வாடிக்கையாகி விட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன் அனகாபுத்தூர், இபி காலனி கல்குட்டையில் மூழ்கி மரியதாஸ் (80) என்பவர் உயிரிழந்தார். அதேபோல் கடந்த மாதம் பொழிச்சலூர், பொன்னுரங்கம் கல்குட்டையில் மூழ்கி பெயின்டர் மோகன் என்பவரும், ஏப்ரல் மாதம் 5ம் தேதி அனகாபுத்தூர் ஜீவமாதா நகரில் உள்ள கல்குட்டையில் மூழ்கி சிவராமன் (எ) சிவா (28) என்பவரும் பலியாகினர்.

மாங்காடு சிக்கராயபுரம் கல்குட்டையிலும் அவ்வப்போது நீரில் மூழ்கி பலர் இறக்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து கல்குட்டை நீரில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதிலிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘கல்குவாரி குட்டையில் தேங்கி நிற்கும் மழைநீரை, அரசே உறிஞ்சி அதனை சுத்திகரிப்பு செய்து சென்னை முழுவதும் குடிநீராக விநியோகம் செய்து வருகிறது. கல்குவாரி குட்டையில் தண்ணீர் எடுப்பதில் மட்டும் ஆர்வமாக இருக்கும் தமிழக அரசு, அதனை பராமரிப்பதில் மட்டும் மெத்தனப்போக்கை கடைபிடிக்கிறது. இதனாலேயே நாளுக்கு நாள் கல்குட்டையில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. அவ்வாறு கல்குட்டையில் மூழ்கி மனிதர்கள் மட்டுமின்றி அருகில் வசிக்கும் மக்களின் ஆடு, மாடுகளும் உள்ளே விழுந்து உயிரிழப்பதால், கல்குட்டை நீர் மாசுபட வாய்ப்பு உள்ளது. அந்த நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் போது அவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, திறந்த நிலையில் உள்ள கல்குட்டைகளுக்கு தடுப்பு வேலி அமைத்தும், எச்சரிக்கை பதாகைகள் வைத்தும் பெருகி வரும் உயிரிழப்பை  தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருக்கின்றனர். எனவே, சென்னை மக்களின் நீராதாரமாக இருக்கும் கல்குட்டைகளை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுப்பதுடன், பெருகி வரும் உயிரிழப்பை தடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: