பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டாய வசூல்

சேலம், ஜூன் 13: சேலம் அடுத்த பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டாய வசூல் செய்த தலைமை ஆசிரியரை கண்டித்து, போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் அடுத்த பனமரத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். 35க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் இந்த பள்ளியில், ஆங்கில வழிக்கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது. பள்ளியின் 6ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பிற்கான நடப்பாண்டு  மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இதனிடையே, மாணவர் சேர்க்கைக்கு கட்டாய வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதன்படி 6ம் வகுப்பில் சேர்ந்த 55 மாணவர்களிடம் தலா ₹2 ஆயிரம் வீதமும், 11ம் வகுப்பில் சேர்ந்த 50 மாணவர்களிடம் தலா ₹5 ஆயிரம் வீதமும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வசூலித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கட்டாய வசூலில் ஈடுபடும் தலைமை ஆசிரியரை கண்டித்து, பல்வேறு அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நோட்டீஸ் அடித்து, அப்பகுதி முழுவதும் ஒட்டிவருகின்றனர். இதனால், கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘‘கல்வித்துறையின் பல்வேறு நிலை அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, வரும் 17ம் தேதி பள்ளியின் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். உரிய நடவடிக்கை இல்லையெனில், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்,’’ என்றனர். 

Related Stories: